வணக்கம்

புதன், 7 அக்டோபர், 2015

நோபல் பரிசுக்கு தெரிவான மூன்று விஞ்ஞானிகள்

இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா, யூயூ தூ ஆகிய மூன்று விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உருளைப் புழுக்களால் ஏற்படும் யானைக்கால் வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகிய இருவருக்கும், மலேரியாவுக்கு புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக யூயூ தூவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகியோர் இணைந்து கண்டுபிடித்துள்ள "அவெர்மேக்டின்' மருந்து, உருளைப் புழு ஒட்டுண்ணிகளால் ஏற்படும் யானைக் கால் வியாதி, பார்வையின்மை ஆகிய நோய்கள் தாக்குதவதை மிகப் பெரிய அளவில் குறைத்துள்ளது.
மேலும், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பிற நோய்களையும் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது.
யூயூ தூவால் கண்டுபிடிக்கப்பட்ட "ஆர்டெமிஸினின்' மருந்து, மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. இந்த இரு கண்டுபிடிப்புகளும், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான 
மக்களைத் தாக்கும் நோய்களை எதிர்த்துப் போரிடும் திறனை மனிதகுலத்துக்கு வழங்கியிருக்கிறது என்று நோபல் பரிசுத் தேர்வுக் குழு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
நோபல் பரிசு 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்தவர். 1833 ஆம் ஆண்டில் பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் திகதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயிலும் மற்ற 

பிரிவுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா 14 கோடியே 80 இலட்சம் இலங்கை ரூபாவாகும்.

நோபல் பரிசுத் தொகையான 9.5 லட்சம் டொலர்களில் (சுமார் 14.8 கோடி ரூபா) ஒரு பாதி வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகிய இருவருக்கும், மற்றொரு பாதி யூயூ தூவுக்கும் பிரித்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூயூ தூ (வயது 84)

சீனாவைச் சேர்ந்த யூயூ தூ, மருத்துவத் துறையிலும், மருந்துகள் துறையிலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருபவர். பாரம்பரிய சீன மருத்துவ முறைகளிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

வில்லியம் கேம்பெல் (வயது 85)

அயர்லாந்தில் பிறந்தவரான வில்லியம் கேம்பெல் அமெரிக்காவின் டுரூ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
உயிரி வேதியியல், உயிரியியல், ஒட்டுண்ணியியல் ஆகிய துறைகளில் இவர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

சதோஷி ஒமுரா (வயது 80)

நோபல் பரிசுத் தொகையின் பாதியை வில்லியம் கேம்பெலுடன் சரிசமமாகப் பிரித்துக் கொள்ளவிருக்கும் சதோஷி ஒமுரா ஜப்பானைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் கிடாசாடோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக