வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் உதவிகளை செவ்வாய்கிழமை வழங்கி வைத்தார்.
அண்மையில் தொடர்ந்து மழைய பெய்ததால் கட்டுமுறிவுகுளம் நிரம்பி நீர் வடிந்ததால் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் நடைபாதை தடைப்பட்டது. அத்தோடு கட்டுமுறிவுக்கு கதிரவெளியில் இருந்து செல்லும் வீதிகளும் இடை இடையே நீரில் மூழ்கியதால் அப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
அத்தோடு சில வீடுகளும் மழை நீரில் பாதிப்புக்குள்ளானது. இதனால் இப்பகுதி மக்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். கட்டுமுறிவில் 148 குடும்பமும், ஆண்டாங்குளத்தில் 75 குடும்பமும் பாதிக்கப்பட்டது. இவர்களுக்கு அவசர அவசரமாக வாகரைப் பிரதேச செயலாளர் மூலம் இரு நாள் உணவு உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அப்பகுதியையும், பாதிக்கப்பட்ட இரு கிராம மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு தமது சொந்த நிதியில் அவசிய தேவைகளின் ஒன்றான பாய் மற்றும் குழந்தைகளுக்கான நுளம்பு வலை போன்ற உதவிகளை இரு கிராமத்திலுமுள்ள 223 குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.
இப்பகுதி மக்களின் தொழில் நிலைகள் முற்றாக பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு உணவு தேவையை நிறைவேற்ற உணவுப் பொருட்கள் உதவிகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் வேண்டியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் இம்மக்களுக்கு உதவும்
மனப்பாங்கு கொண்ட
பெருந்தகைகள் மற்றும் தன்னார்வ தொண்டர் நிறுவனங்கள், புலம்பெயர் உறவுகளை இவர்களின் உணவு தேவையை நிறைவேற்றி உதவுமாறு வேண்டி கொள்கின்றார். அதேவேளை தாமும் இதற்கு ஏற்ற ஆதரவுகளை புரிவதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பிரதேசமான மிகவும் வறுமைக் கோட்டில் அமைந்த மக்களை கொண்ட பகுதியாகும். கடந்த யுத்த சூழலும், சுனாமி அனர்த்தத்தாலும் இப்பகுதி மிகவும்
பாதிக்கப்பட்டது.
இவ்வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய இரு கிராமங்களும் பொலநறுவை மாவட்டத்தை எல்லையாக கொண்டதான நடுக் காட்டின் மத்தியில் அமைந்த கிராமங்களாகும். இக்கிராமங்களுக்கு செல்வோர் கதிரவெளி சந்தியில் இருந்து 19 கிலோ மீற்றர் காடு வழியாக செல்ல வேண்டும்.
கடந்த பல காலமாக போக்குவரத்து வசதி எதுவும் இன்றி கஷ்ரப்பட்ட இம்மக்களுக்கு அண்மையிலேயே ஒரு நாளைக்கு ஒரு தடவை பஸ் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதைகள் உடைக்கப்பட்டதால் அல்லது பழுதடைந்ததால் வாகனம் செல்ல முடியாது. அரச
அலுவலகம் என்றால்
பாடசாலை மாத்திரமே இங்கு உண்டு. ஏனைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற 19 கிலோ மீற்றர் அவர்கள் நடையாகவோ அல்லது துவிச்சக்கர வண்டி அல்லது மோட்டார் வாகனம் போன்றவை மூலமும் கதிரவெளிக்கு வரவேண்டும்.
இக்கிராம மக்கள் தேன் எடுத்தல், மிருகங்களை பிடித்தல், காட்டு பழங்களை பெற்று 19 கிலோ மீற்றர் கதிரவெளிக்கு கொண்டு வந்து விற்றல், கமச் செய்கை காலங்களில் சிறு கமம் மற்றும் அங்குள்ள குளங்களில் மீன் பிடித்தல் உட்பட்ட தொழிலை புரிகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக