வடக்கு கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் போராட்டத்தினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும்
பயங்கரவாத
தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய யாழ். மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது. யாழ் நகரில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹர்தாலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் மக்களின் அத்தியாவசியமான வைத்தியசாலைச் சேவைகள்
வழமைப்போல் இயங்குவதுடன், தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் வெளிமாட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்திற்கான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்துள்ளன. அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பூரண ஆதரவை
வழங்குவதாக
அறிவித்துள்ளன. வடக்கு மாகாண சபை, சர்வமத தலைவர்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகம், பல்கலைக்கழக சமுகம், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை இந்த ஹர்த்தாலுக்கு வழங்குவதாக
அறிவித்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக