நுவரெலியா - நானுஓயாவில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்த பொலிஸ் நிலையம் திருத்தியமைக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பொலிஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் இருந்த போதும் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்தது.
அதற்கு தேவையான நிதி கடந்த அரசாங்கங்களினால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் நானுஓயா பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையத்தை திருத்தியமைக்க 37 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
இத்தொகை பொலிஸ் நிலைய புனரமைப்பு பணிகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
இருந்த போதும் நானுஓயா பொலிஸ் நிலையத்தின் 18ஆவது பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரியந்த அமரசிங்க மற்றும் பொலிஸ் உதவி அதிகாரி அபேசிங்கவின் கடும் முயற்சியால் சிரமதான முறையில் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டது.
இதன்பின்னரே குறித்த பொலிஸ் நிலையத்தின் திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சகல மதத்தலைவர்களும் கலந்து கொண்டதோடு பிரதம அதிதியாக நுவரெலியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் பத்மசிரி முனசிங்க, டீ.எம்.யூ.எம்.திஸாநாயக்க, பிரிதி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.தஸநாயக்க, பிரிதி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.ஐ.அனுர பண்டார, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக